7.4.12

சிறுநீரகத் தொற்று... காரணங்களும், தீர்வுகளும்


பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயசு பேதம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கிற பிரச்சினை யூரினரி இன்ஃபெக்ஷன் எனப்படுகிற சிறுநீரகத் தொற்று. சிறுநீர் கழிப்பதில் சிரமம், வலி, எரிச்சல், ரத்தக் கசிவு என இது கொடுக்கும் இம்சைகள் எக்கச்சக்கம். சிறுநீர்த் தொற்று ஏற்பட காரணங்கள், தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் என். ஆனந்தன்.

சிறுநீரகங்களில் இருந்து சிறுநீர் உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் வழியா, சிறுநீர் பையில் சேர்ந்து பிறகு வெளியேறும். இந்தப் பாதைல பொதுவா பாக்டீரியா இருக்காது. ஆனா, பக்கத்துல உள்ள மலக்குடல்ல எப்போதும் பாக்டீரியா இருக்கும். அங்கருந்தும், மற்ற அந்தரங்க உறுப்புகள்லேருந்தும் பாக்டீரியா கிளம்பி, சிறுநீர் பாதைல ஏறி வந்து, அதன் விளைவா சிறுநீர் தொற்று வரலாம்.

இப்படி பாக்டீரியா தொற்று ஏற்படாம இருக்க பொதுவா நம்ம உடம்புல சில விஷயங்கள் நடக்கும். ஆனா, சம்பந்தப்பட்டவங்களோட உடம்புல எதிர்ப்பு சக்தி கம்மியா இருந்து, பாக்டீரியா தாக்கம் அதிகரிச்சா, தொற்று உண்டாகும்.ஆண்களைவிட, பெண்களுக்கே இந்த சிறுநீர் தொற்றுப் பிரச்னை அதிகமா இருக்கு. சில ஆண் குழந்தைகளுக்கு அபூர்வமா சிறுநீர் பைக்குக் கீழே ஒரு வால்வ் இருக்கும்.

அப்படியிருந்தா, சிறுநீர் வெளியேறாது. அதே மாதிரி சில பெண் குழந்தைகளுக்கு ‘ரிஃப்ளக்ஸ்’ சொல்ற பிரச்னை இருக்கும். அதாவது சாதாரணமா சிறுநீர் பையிலேருந்து வெளியேறும் சிறுநீரானது, மறுபடி திரும்பி, சிறுநீர் பையிலேருந்து, சிறுநீரகத்துக்குப் போகறதாலயும் இந்தத் தொற்று வரலாம். பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு சிறுநீரகக் குழாய்கள்ல அடைப்பு இருந்து, அதுல சிறுநீர் தங்கறதாலயும் தொற்று வரலாம்.

பெரியவங்களுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட, சிறுநீரகக் கல் காரணமா இருக்கலாம். சிறுநீர் பைக்கு கீழே உள்ள உறுப்பு விரிவடைஞ்சாலும் தொற்று வரும். நீரிழிவு பாதிச்சவங்களுக்கு சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படற வாய்ப்பு, மத்தவங்களைவிட 3 மடங்கு அதிகம். 5 சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்துல சிறுநீர் தொற்று ஏற்படலாம். சரியா கவனிக்கத் தவறினா, குறைப்பிரசவமோ, அபார்ஷனோ ஆகலாம்.

சிறுநீர் கழிக்கிறப்ப லேசா எரிச்சல் வந்தாலே பலரும் உடனே மாத்திரை வாங்கி சாப்பிடறாங்க. அது தவறு. முதல்ல சிறுநீரை ‘கல்ச்சர் டெஸ்ட்’டுக்கு கொடுத்து, எந்தக் கிருமி, எந்தளவுக்குத் தாக்கியிருக்குனு கண்டுபிடிக்கணும். பிறகு மருத்துவரோட பரிந்துரைப்படி ஆன்ட்டிபயாடிக் எடுத்துக்கணும். நீரிழிவு இருக்கா, சிறுநீரகங்களோட செயல்பாடு சரியா இருக்கானு பார்க்கணும்.

சிறுநீர்ல ரத்தம் கலந்து வந்தா அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலமா சிறுநீர் பாதைல பிரச்னை இருக்கா, கல் இருக்கானு பார்க்கணும். பிரச்சினைக்கேத்தபடிதான் சிகிச்சைகளை எடுக்கணும்’’ என்கிறார்.
- ஆர்.வைதேகிG.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar