9.7.12
தடுப்பூசிகள் தேவைதான்...?
தன் குழந்தைக்கு நோயேதும் வருவது என்பது எவருமே விரும்பாத ஒன்று. எம்மால் முடியுமெனில், அவர்களுக்கு எந்த ஒரு சிறு நோயும் வராமல் காப்பாற்றுவோம். அது தடுப்பூசியேற்றலினால் சாத்தியப்படும். தடுப்பூசியேற்றலின் மூலம் உலகம் கண்ட பயங்கர நோய்களிலிருந்து உங்கள் குழந்தையைக் காப்பாற்றலாம். அது மட்டுமன்றி உங்கள் அயலிலுள்ள குழந்தைகளையும் அந்நோய்களிலிருந்து காப்பாற்றலாம்.மேலும், பல நூற்றாண்டுகளாக குழந்தைகளைக் கொன்று கொண்டிருக்கும் நோய்களை உலகிலிருந்து விரட்ட உதவலாம்.
உடம்பில் நோயெதிர்ப்பு சக்தி எவ்வாறு உருவாகிறது?
தடுப்பூசி மருந்துகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதனை கவனிக்கும் முன்பு உடம்பின் நோயெதிர்ப்பு சக்தி எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை சுருக்கமாக நோக்குவோம்.
கிருமிகள் உடலினுள் செல்லும் போது நோய் ஏற்படுகின்றது. உதாரணமாக, அம்மை நோயிற்குரிய வைரசு உடம்பினுள் கிருமிகள் செல்லும் போது அம்மை நோய் ஏற்படுகிறது. உடம்பினுள் கிருமிகள் சென்றவுடன் அவை பல்கிப் பெருக ஆரம்பிக்கின்றன. எமது நிர்ப்பீடணத்தொகுதி இந்த கிருமிகளை இனம் கண்டு அதற்கேற்ற பிறபொருளெதிரியினை அதாவது என்டிபொடியினை உருவாக்குகிறது. இந்த பிறபொருளெதிரிகள் பிரதானமாக 2 தொழிலைச் செய்கின்றன.
முதலாவதாக, பிறபொருளெதிரிகள் நோயினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கிருமிகளை அழித்து உங்களை குணப்படுத்துகின்றன. உதாரணமாக, அம்மை நோயினை ஏற்படுத்திவிடும் அதே சந்தர்ப்பத்தில் உடம்பு அதற்குரிய பிறபொருளெதிரியினை உருவாக்கி, அம்மை வைரசினை அழிக்கும். இதனாலேயே குறிப்பிட்ட சில தினங்களில் அம்மை நோயிலிருந்து குணம் காண தொடங்குகிறோம்.
பிறப்பொருளெதிரியின் இரண்டாவது தொழில் மிகவும் முக்கியமானது. அவை எமது இரத்தத்தில் இருந்து குறிப்பிட்ட கிருமியினால் மீண்டும் நோயேற்படாமல் பாதுகாக்கின்றன. உதாரணமாக, அம்மை நோய் ஒருமுறை ஏற்பட்ட ஒருவரின் இரத்தத்தில் அம்மை வைரசிற்கு எதிரான பிறபொருளெதிரி உலவி வரும். இவரின் உடம்பினுள் பல வருடங்களிற்கு பின்னரும் கூட அம்மை வைரசு உட்சென்றால், அதனை அந்த குறிப்பிட்ட பிறபொருளெதிரி உடனடியதாக கண்டறிந்து, அவை பல்கிப்பெருகும் முன்னரே கொன்றுவிடும். இதனால் அவருக்கு மீண்டும் அம்மை நோய் வராது. இந்தச் செயற்பாட்டின் காரணமாக சராம்பு, அம்மை, ருபெல்லா போன்ற சில நோய்கள் ஒருவரின் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே ஏற்படுகின்றன.
தடுப்பூசிகள் எவ்வாறு செயற்படுகின்றன ?
தடுப்பூசிகள் என்பன நோய்க்கிருமி உங்களைத் தாக்கும் முன்பே அதற்கெதிரான நோயெதிர்ப்புச் சக்தியை பெற்றுத் தருவனவாகும். குறிப்பிட்ட நோயிற்குரிய தடுப்பூசிகள் அந்த நோயினை ஏற்படுத்தும் கிருமிகளினாலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், தடுப்பூசியிலுள்ள கிருமிகள் வீரியம் குறைந்தவையாகவோ அல்லது கொல்லப்பட்டவையாகவோ இருக்கும். இவற்றால் நோயினை ஏற்படுத்த முடியாது. எனினும், உடம்பில் தேவையான நோயெதிர்ப்பு சக்தியினை உருவாக்கிவிட முடியும்.
தடுப்பூசிகள் ஊசி மூலம் ஏற்றப்பட்டதும், உடம்பின் நிர்ப்பீடணத் தொகுதி அதனை நோயை உருவாக்கும் கிருமியாகக் கருதி, அதற்குரிய பிறபொருளெதிரியை உருவாக்கி அதனை அழித்துவிடுகிறது. அதன்பின் அந்த பிறபொருளெதிரிகள் உடம்பில் உலவி வரும். பிள்ளை எப்போதாவது நோயை உருவாக்கும் கிருமியை சந்தித்த வேளையில் பிறபொருளெதிரி அதனை அழித்து நோய் வராமல் தடுக்கும். உதாரணமாக, அம்மை நோயிற்குரிய தடுப்பூசி ஏற்றியிருப்பின், அவரின் உடலில் அம்மை நோயிற்குரிய பிறபொருளெதிரி காணப்படும். எனவே அம்மை வைரசு உட்சென்றால் நோய் ஏற்படாது.
தடுப்பூசி ஏற்றினால் என்ன மாற்றங்கள் ஏற்படலாம் ?
தடுப்பூசி ஏற்றும்போதும், பின்னரும் பிள்ளை அழும்.
தடுப்பூசி ஏற்றிய பின் பல மணித்தியாலங்களுக்கு குழந்தை அசௌகரியத்தன்மையினை காண்பிக்கலாம்.
குழந்தையின் உடல் வெப்பநிலை சற்று அதிகரிக்கலாம்.
இதன்போது பெரசிடமோல் வழங்கலாம்.
தடுப்பூசி ஏற்றிய இடத்தில் சிவப்பு நிறமாகியோ அல்லது சிறிதளவு தடித்தோ காணப்படலாம். இது தானாக மறைந்துவிடும்.
எனினும், கீழுள்ள விளைவுகளை காணுமிடத்து வைத்தியரை அணுகுவது சிறந்தது.
சிவப்பு நிறம் 10 cmஐ விட அதிக இடத்தில் பரவியிருத்தல்.
தோலில் ராஷ் போன்று இருத்தல்.
உடம்பின் ஏதேனும் ஒரு பகுதியோ, உடம்பு முழுவதுமோ சொறிதல்.
தடுப்பூசி ஏற்றலினை எந்தச் சந்தர்ப்பத்தில் தள்ளிப்போட வேண்டும் ?
குழந்தைக்கு அதிக காய்ச்சல் உள்ள போது தள்ளிப்போடல் சிறந்தது. இது தடுப்பூசியினால் காய்ச்சல் ஏற்பட்டது என்ற சந்தேகத்திற்கு வழிவகுக்காது மட்டுமன்றி தடுப்பூசி காய்ச்சலினை அதிகப்படுத்துவதையும் தவிர்க்க உதவும்.
முந்தைய தடுப்பூசிகளுக்கு பயங்கர விளைவுகள் ஏற்பட்டிருப்பின் வைத்திய கண்காணிப்பின் கீழ், வைத்திய அறிவுரைக்கேற்ப வழங்க வேண்டும்.
தடுப்பூசிகள் என்பன பெற்றோர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதிலும் இலங்கையைப் பொறுத்தவரை குழந்தைக்கு அதிகமுக்கியமான தடுப்பூசிகள் அனைத்தும் அரசாங்க செலவில், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் தடுப்பூசிகளை உங்கள் கவனக்குறைவாலும், மூட நம்பிக்கைகளாலும், பிழையான கொள்கைகளாலும் பிள்ளைகளுக்கு வழங்கத்தவறினீர்கள் எனில் அது நீங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் துரோகமாகிவிடும். எனவே, கிடைத்துள்ள வரப்பிரசாதத்தினை செவ்வனே பயன்படுத்தி நம் பாலகர்களை நோயிலிருந்து காப்போம்.(TK) G.JK Media Works Health Team 2012
Author
Anonym
Abonner på:
Legg inn kommentarer (Atom)
Ingen kommentarer:
Legg inn en kommentar