14.2.11

பக்கவாதத்திற்கு மருந்து: மஞ்சள்


உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டும் மருந்து ஒன்று பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதாக கூறப்பட்டுள்ளது.முயல்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இத்தகைய முடிவுகள் வந்துள்ளன. அடுத்து மனிதர்களிடம் சோதனை செய்ய செடார்ஸ் சினாய் மருத்துவ நிலையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்தானது, மூளையின் செல்களை சென்று சேர்ந்து தசை மற்றும் அசைவு பிரச்சனைகளை தீர்த்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் மருந்தை கண்டறிந்திருப்பது மிகவும் முக்கியமான ஒரு முன்னேற்றம் என்று தி ஸ்ட்ரோக் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக மஞ்சள் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மஞ்சளில் காணப்படும் கர்குமின் எனப்படும் பொருளும் பல்வேறு நல்ல பலன்களை கொண்டுள்ளது என்று பல ஆய்வு கூட ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
ஆனால் இந்த கர்குமின், மூளையை கெட்ட பொருட்களிடம் இருந்து பாதுகாக்கும் செயலை தானாக செய்ய முடியாமல் உள்ளது. இந்த நிலையில், கர்குமினை சிஎன்பி-001 என்று வேறு ஒரு வடிவத்துக்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மாற்றியுள்ளனர். இது மூளையை பாதுகாக்கும் திறனை கொண்டிருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
ஆய்வுக்கூடத்தில் முயல்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பக்கவாதம் ஏற்பட்ட மூன்று மணி நேரத்திற்கு இந்த மருந்து வேலை செய்வது தெரிய வந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை நடத்திய டாக்டர் பால் லேப்சாக், பக்கவாதம் ஏற்பட்ட பின்னர் மூளையில் உள்ள செல்களை உயிருடன் வைக்க தேவையான பல்வேறு வேலைகள் நடைபெறுவதில் இந்த மருந்து சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
இப்போது இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை செய்ய இருந்தாலும், முழுமையாக குணப்படுத்த கூடிய மருந்து ஒன்றை உருவாக்க பல ஆண்டுகாலம் ஆகலாம்.

Ingen kommentarer:

Legg inn en kommentar