18.4.11

தினமும் 4 சாப்பிட்டால் போதும் கொழுப்பை குறைக்கிறது ஆப்பிள்..!

லண்டன் : ‘ஆன் ஆப்பிள் எ டே... கீப் த டாக்டர் அவே’ என்ற பழமொழியை மாற்றியுள்ளது மருத்துவ உலகம். ஆம்; ‘4 ஆப்பிள்ஸ் எ டே... கீப் யுவர் கொலஸ்ட்ரால் அவே’ என்பதுதான் அந்த புதுமொழி. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மறுக்கும். டாக்டர்களிடம் போனால் ஏகப்பட்ட பரிசோதனைகள்... அப்புறம் மருந்து, உடற்பயிற்சி, டயட் என்று பெரிய பட்டியலை பாக்கெட்டில் திணிப்பார்கள். பல நேரங்களில் டாக்டர் அட்வைஸை பின்பற்றுவது இயலாத காரியம்.
பிரச்னையும் தீர வேண்டும், வழிமுறைகளும் எளிமையாக இருக்க வேண்டும் என்பது எல்லாருடைய விருப்பம். உலகம் முழுவதும் மாரடைப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உடல் எடை குறைப்பு மற்றும் கொழுப்பு குறைப்பு குறித்த தொடர் ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் புதிதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. தினமும் காலை சிற்றுண்டிக்கு பதிலாக 4 அல்லது 5 ஆப்பிள்களை தொடர்ந்து 6 மாதங்களுக்கு எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு குறையும் என்கின்றனர் அவர்கள். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களில் இருந்து பாதுகாப்பும் கிடைக்கிறதாம். கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் ஆப்பிள், அதே நேரத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் ஹெச்டிஎல் கொழுப்பின் அளவை சராசரியாக 4 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரிக்கிறது என்கின்றனர்.

தேவையற்ற கொழுப்பால் உடலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் 240 கலோரிகள் என்ற அளவில் காலை சிற்றுண்டிக்கு பதிலாக பழ உணவை எடுத்துக்கொள்வதால் கொழுப்பு கரைவதுடன் உடல் எடையும் கணிசமாக குறையும். ஆப்பிளில் உள்ள ஆன்ட்டி - ஆக்சிடன்ட்ஸ், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. பழ உணவால் பசி எடுப்பதும் குறையும். உடல் புத்துணர்வுடன் இருக்கும். இத்தகைய உணவு முறையால் உடலுக்கு எந்தவித பாதிப்போ பக்க விளைவுகளோ இருக்காது. எனவே, உடல் எடைக்கு ஏற்ப தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்கள் சாப்பிடலாம் என்பது ஆராய்ச்சி டாக்டர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar