9.4.12

மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலி

dr_s_murugananthan_

ஒவ்வொரு மாதவிலக்கின் போதும் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படுவதாக ஒரு இளம் பெண் சிகிச்சைக்கு வந்தார். தாங்க முடியாத வலியில் அவர் அவஸ்தைப்படுவது தெரிந்தது. ஒவ்வொரு மாதமும் இப்பிடித் தான் என தாயார் கவலையுடன் கூறினார். இதற்கான காரணம் Endometriasis என்பதை அனுமானித்துக் கொண்டு மேற்கொண்டு மகப்பேற்று மருத்துவரின் ஆலோசனை பெறும் படி கூறினேன். உடனடி வலி நிவாரணியையும் வழங்கினேன்.

பொதுவாக மாதவிடாயின் போது பெண்களுக்கு தேக உளைவு, வயிற்று வலி முதலானவை ஏற்படலாம். இதனால் தான் மாதவிலக்கை சுகமில்லை என்று அழைக்கும் வழக்கம் இன்றும் பல பிரதேசங்களில் உண்டு. மாதவிலக்கு நாட்களில் பெண்ணுக்கு ஓய்வு  தேவை என்பதால் தான் முன்பு  கரிக்கோடு கீறி பெண்களை ஒரு புறமாக படுக்க விடும் பழக்கம் எம்  மூதாதையரிடம் இருந்தது. துரிதமான இன்றைய உலகில் இந்த வழக்கம் மாறிவிட்டது. இளம் பெண்களில் பலருக்கு இருக்கும்  வயிற்று வலி காலப் போக்கில் அல்லது திருமணத்திற்குப் பின்னர் குறைவடைகிறது. எனினும் ஒரு சிலருக்கு இந்த வயிற்று வலி தொடர்கிறது. சாதாரண வலி நிவாரணிகளுக்கு சில வேளை குறைவடைந்தாலும் வலி மீண்டும் ஏற்படுகிறது. அடுத்த மாத விலக்கின் போது மறுபடியும் வயிற்று வலியால் இவர்கள் அவஸ்தைப்படுவது தொடர் கதையாகிறது. இவ்வாறு ஏற்படும் தீவிர வலி எண்டோமெற்றியாசிசினால் ஏற்படுகிறது. இதை லாப்பிரஸ்கோபி பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம்.
கர்ப்பப்பையின் மையப்பகுதியின் சுவரின் உட்புறமாக இருக்கும் மேற்படை இழையம் Endometrium ஆகும். சிலவேளைகளில்   இந்த இழையம் கர்ப்பப் பைக்கு வெளியேயும் காணப்படுவதையே Endometriosis என அழைக்கிறோம். இவ் இழையம் மாதவிலக்கின் போது சிதைவடைந்து உதிரமாக வெளியேறுகிறது. கருப்பைக்குள் இது  ஏற்படும் போது மாத விலக்காக வெளியே வருகிறது. ஆனால் வெளியே உள்ள இழைய ங்களில் இருந்து  கசியும் உதிரம் வெளிவர முடியாதமையினாலேயே வயிற்று வலி ஏற்படுகிறது.
சாதாரண ஸ்கான் பரிசோதனை மூலம் இதைக் கண்டறிய முடியதாமையினால் கீழ் வயிற்றில் சிறிய துளையிட்டு அதனூடாக செலுத்தப்படும் நுண்ணிய கமரா மூலம் Laproscopy பரிசோதனை செய்து  நோயை இனங்காண முடியும். இந்த வயிற்று வலிக்கு நிரந்தர தீர்வு சத்திர சிகிச்சையே. வயிற்றை வெட்டாமலே சிறிய துளையிட்டு மகப்பேற்று வைத்திய நிபுணர் இதை அகற்றுவார். இச் சத்திர சிகிச்சையை மேற் கொள்வதன் மூலம் கர்ப்பப்பைக்கு வெளியேயுள்ள எண்டோமென்றிய இழையங்களை நீக்கி அழிக்கலாம்.
எண்டோமெற்றியோசிஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு  குழந்தைப் பாக்கியம் தாமதமாகலாம். இந்த நோயால் பீடிக்கப்பட்ட பெண்களின் சூலகத்தில் இருந்து முட்டை வெளியேற்றம் சீரற்றதாக இருக்கும். அத்துடன் வெளியேயுள்ள இழையங்களினால் வெளியேறிய முட்டை பலோப்பியன் குழாய் (Follopian Tube) ஊடாக கருப்பைக்குள் செல்வதும் தடைப்படுகின்றது. இதனால் இவர்கள் கருக் கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைப் பாக்கியம் தள்ளிப் போவதுடன் மன உழைச்சலும் ஏற்படுகிறது. எண்டோமெற்றியோசிஸ் நோயுள்ளவர்கள் சத்திர சிகிச்சை மூலம் பூரண குணமடைய முடியும் என்பதால் உங்கள் குடும்ப வைத்தியரின் ஆலோசனை பெற்று மகப் பேற்று நிபுணரிடம் சிகிச்சை பெறுங்கள்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar