9.4.12

முதுகையும் கவனியுங்கள்

முகம், கை, கால், என ஒவ்வொன்றிற்கும் தரும் முக்கியத்துவத்தை முதுகு பகுதிக்கு தருவதில்லை. நம்மில் பெரும்பாலானோர் அதிகம் கவனிக்காமல் விடும் பகுதியும் முதுகுதான். இதனால் முதுகுப் பகுதியில் அழுக்கு மற்றும் எண்ணெய் சேர்ந்து பருக்கள் தோன்றிவிடுகின்றன. எனவே முதுகை அழகாக்க கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். முதுகை மென்மையாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள். நீங்களும் உங்கள் முதுகின் அழகை எடுத்துக் காட்டும் ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவீர்கள்.
குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல முதுகையும் கவனிக்க வேண்டும். தலைக்கு தண்ணீர் ஊற்றும் போது வழியும் எண்ணெய் முதுகில்தான் தேங்குகின்றன. எனவே நீளமான பிரஷ் உபயோகித்து நன்கு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். முதுகுப் பகுதியை முழுவதாக சுத்தம் செய்ய இப்பொழுது நீண்ட கைபிடி உள்ள பிரஷ் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை வாங்கி உபயோகிக்கலாம்.
முதுகை "ஸ்க்ரப்' செய்வதால் உயிரிழந்த சருமம் அகன்று முதுகு புத்துயிர் பெறும். அவ்வாறு தொடர்ந்து செய்யும் போது புது சருமம் கிடைக்கும். கடையில் கிடைக்கும் ஸ்க்ரப் உபயோகிக்க விருப்பம் இல்லை என்றால் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.
உப்பு சிறந்த ஸ்க்ரப்பாக பயன்படுகிறது. உப்பை நன்றாக பொடித்து அதை நன்றாக முதுகு, கழுத்துப் பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்வதன் மூலம் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். இரத்த ஓட்டம் சீராகும்.
ஒரு சிலருக்கு முதுகு வரண்டு போய்விடும். இவர்கள் ஒரு ஸ்பூன் பேபி ஒயில் விட்டு நன்றாக முதுகுப் பகுதியை மசாஜ் செய்யவும். இதனால் முதுகு மென்மையாகும். இரண்டு மேசைக்கரண்டி சீனியுடன் நான்கு மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெயை சேர்க்கவும். இதனை நன்றாக கலந்து முதுகை நன்றாக தேய்க்கவும். பிறகு கழுவவும். உலர்ந்த சருமத்தின் ஈரத்தன்மை கிடைக்கும்.
எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்கள் முதுகை கவனிக்காமல் விடுவதால் முதுகு மங்கலாகும். இதனால் முதுகில் கரும் புள்ளிகள், பரு தோன்றும்.
முதுகை அழகாக்கி பருவை போக்க இரண்டு தேக்கரண்டி சீனியுடன் ஆறு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றைக் கலந்து முதுகை நன்றாக தேய்த்து கழுவவும்.  எண்ணெய் பசை நீங்கி சருமம் பளிச் என்று ஆகும்.
வாரத்தில் ஒரு முறை சந்தனம் மற்றும் பன்னீர் கலந்த கலவையை முதுகில் தடவவும். உலர்ந்த பிறகு கழுவிவிடவும். இதனால் முதுகிற்கு பொலிவு கிடைக்கும். இவை தவிர கூன் போடாமல் நிமிர்ந்து நடப்பதும் முதுகு சுருக்கமின்றி அழகாக தெரியும். அப்புறம் என்ன ஜன்னல் வைத்த மற்றும் படிக்கட்டு வைத்த ஜாக்கெட் தைத்து போட்டு முதுகின் அழகை அதிகரிக்கச் செய்யலாம்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar