3.7.12

சுண்டை

unarmed_night_shade
வேறுபெயர்: மலைச்சுண்டை, கடுகி
தாவரவியற் பெயர்: Solanumver verbascl folium
ஆங்கிலம் பெயர்: Unarmed night shade
இது பெரும்பாலும் மலைகளில் பயிராகும் செடி, ஆனைச் சுண்டை என வேறொரு வகையுமுண்டு. இதை பச்சையாக சமையல் செய்து உண்பது அரிதாக இருப்பினும் இக்காயை வெய்யிலில் உலர்த்தி பின்பு புளித்தமோரில் சிறிது உப்பை சேர்த்து அதில் மேற்கூறிய சுண்டங்காயைப் போட்டு ஊறவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்வது நமது வழக்கம். இதில் சிறிது கைப்புத் தன்மை உண்டு. எனினும் இது உடலுக்கு பல நன்மைகளை உண்டாக்கக்கூடியது.

வற்றலால் சுவையின்மை, வயிற்றுப் புளு, நிணக்கழிச்சல், சீதக்கட்டு நீங்கும். இது பசியை உண்டுபண்ணும். இதனை மார்புச்சளி, செரியாக் கழிச்சல் மூலம் முதலியவைகளுக்கும் கொடுக்கலாம். மருத்துவப் பயன்களாவன;
சுண்டங்காய் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து பின் நசுக்கிப் பொடியாக்கிக் கொண்டு பகலில் 1 கைப்பிடி சாதத்துடன் தேவையான அளவு தூளைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவிட்டு பின் வழக்கம் போல உண்ணலாம். இவ்விதம் தொடர்ந்து ஒரு வாரம் அருந்தினாலே போதும் குடலில் உள்ள கிருமிகள் வெளிப்படும்.
வயிற்றுப் போக்கு குணமாக
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாம்பருப்பு, மாதுளம் பழத்தோல், நெல்லிவற்றில், ஓமம், வெந்தயம் வகைக்கு 30 கி அளவு எடுத்து வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/2  தே.க. அளவு சூரணத்தை மோரில் உண்டுவர எல்லா வகை வயிற்றுப் போக்கும் தீரும்.
காய்ந்த சுண்டங்காய் வற்றலை உப்பிட்ட மோரில் போட்டு முறையாகப் பிசறிப் பிசிறி உலரவைத்து நெய்யிலாவது அல்லது நல்லெண்ணெயிலாவது வறுத்து இரவு ஆகாரத்துடன் சாப்பிடலாம். 
வறுத்த சுண்டங்காய் வற்றலை நன்றாகப் பொடி செய்து உப்பு, புளி,காரம் கூட்டிய குழம்பில் சேர்த்துக் காய்ச்சி அன்னத்தில் கலந்து சாப்பிடுவது உண்டு. இது உண்ணப் பேதியை நிறுத்தும்.
சுண்டங்காய் வற்றல், கறிவேப்பிலை, ஓமம், மிளகு சுக்கு, திப்பிலி, பெருங்காயம் இவற்றில் கறிவேப்பிலையை சருகு போன்று காய வைத்து அதில் 10 கிராமும் அதே அளவுக்கு இதர பொருட்களையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக வறுத்தெடுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்டு பகல், இரவு சாப்பிடுவதற்கு முன் ஒரு கைப்பிடி சுடு சாதத்துடன் 1தே.க. தூளும் ஒரு தே.கரண்டி பசு நெய்யும் விட்டுப் பிசைந்து உண்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
வாய்வு மிகுதியால் வயிற்றுப் போக்கு ஆகும் நிலையில் சுக்கு, ஓமம், கசகசா, சுண்டங்காய் வற்றல்,  காய்ந்த கறிவேப்பிலை இவற்றை சம அளவு எடுத்து தனித்தனியே நெய் விட்டு வறுத்து ஒன்றாகக் கொட்டி இடித்து சூரணித்துக் கொண்டு வேளைக்கு 1/2  தே.க. வீதம் காலை மாலை 2 வேளையாக வெந்நீரில் அருந்த நிற்கும்.
மூக்கடைப்பிற்கு

சுண்டை வேர், பாலைவேர் சம எடை உலர்த்திப் பொடித்து வஸ்திரகாயஞ் செய்து குப்பியில் வைத்துக் கொண்டு மூக்கில் உறிஞ்சவும் மூக்கடைப்பு குணமாகும்.
செரியாமைக்கு

சுண்டங்காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து உப்பு, மிளகு, சீரகம்,கறிவேப்பிலை, வெந்தயம் இவைகளையும் சிறிது வறுத்து கூட்டிப் பொடித்துச் சோற்றுடன் கலந்து சாப்பிடலாம்.
சுண்டங் காய் நல்லதொரு இரும்புச் சத்துள்ள பொருள் மலச்சிக்கலைப் போக்கும். உணவை ஜீரணிக்கப் பண்ணும். நெஞ்சில் சளியைப் போக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண், கர்ப்பப்பைப்புண், இவற்றை குணமாக்கும் பெண்களுக்கு இது ஒரு  சத்தான உணவு. இரும்புச் சத்து நிறைய இச் சுண்டங்காயில் இருப்பதால் பெண்கள் அனைவரும் சுண்டங்காய்களை சமையலில் சேர்ப்பதால் கைவலி, கால்வலி, இடுப்பு வலி தீரும். இதற்கு சுண்டங்காய் பால் கறி சமைத்துண்ணலாம்.
சுண்டங் காய் பால்கறி
சுண்டங்காய் ஒரு கப், சோம்பு 1 தே.க., தக்காளி 3, சின் வெங்காயம் பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி, கராம்பு 1, தேங்காய் துருவல் ஒரு மூடி, மஞ்சள் பொடி 1 தே.க., கறிவேப்பிலை தேவையான அளவு, மல்லி இலை ஒரு கொத்து, மல்லித்தூள்  1 தே.க. , நிலக்கடலை 100 கி, தாளிக்க எண்ணெய் 3 கரண்டி, உப்பு தேவையான அளவு. காய்ந்த மிளகாய் 2, கசகசா 1 தே.க., பூண்டு 3 பல்.
காயை நீரில் அலசி இரண்டிரண்டாக அரிந்து வேகவிடவும் மல்லித்தூள், உப்புத்தூள், மஞ்சள் தூளையும் போட்டு காய் வெந்துவரும் போது சோம்பு, தேங்காய்த்துருவல், இவைகளை அரைத்து ஊற்றவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கறுவாப்பட்டை, சோம்புதூள் செய்து போட்டு சிவந்து வரும் போது  கசகசாவை தூள் செய்து போட்டு வதக்கி வெங்காயம் போட்டு வதக்கி, தக்காளி போட்டு வதக்கி, மல்லித்தழையை பொடியாக அரிந்து போட்டு வதக்கி சுண்டக் காய் பால் கறியை தாளிக்கவும்  தேங்காய் முற்றியது ஒன்றை கரகரப்பாக அரைத்துப் பாலெடுத்து சுண்டங்காய் பால்கறியை இறக்கி வைத்து ஊற்றவும். இந்த சுண்டங் காய் பால்கறியை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்டலி, தோசை, பிட்டு, உப்புமா, அனைத்துடனும் சேர்த்தும் சாப்பிடலாம்.
சுண்டங் காய் பச்சடி
சுண்டங்காயை பொடியாக அரியவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி 2 தே.க. கடுக, 1 துண்டு பெருங்காயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு, மல்லித்தழை 1 கைப்பிடியை பொடியாக அரிந்து போட்டு இறக்கும் முன் சுண்டங்காய்களைப் போட்டு நன்றாக வதக்கிக் கீழே இறக்கி தயிரைக்  கொட்டி உப்பைத் தூள் செய்து போட்டு வெங்காயம் அரிந்தது ஒரு கைப்பிடி போட்டு பச்சை மிளகாய் 2 ஐ அரைத்துப் போட்டு நன்கு கலக்கி மதிய உணவுடன் சாப்பிட கண்கள் குளிர்ச்சி அடையும். உடலும் பலமடையும் வாரம் 3 நாள் சாப்பிடுவது நல்லது.  புழுத் தொல்லையும் இராது.
(Thinakural) G.JK Media Works Health Team 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar