23.1.11

கீரை (2)

துத்திக்கீரை
துத்திச் செடி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.இதனுடைய இலைகள் அகன்றும், இலைக்காம்புகள் நீளமாகவும் இருக்கும். இலைக்காம்பின்  இடுக்கில் மஞ்சள் நிறப்பூ  பூக்கும். மூலத்தைப் போக்கும் அற்புதக் கீரையாக துத்திக்கீரை விளங்குகிறது.துத்தியின் இளம்கீரை, உண்ணுவதற்குப் பயன்படுகிறது.இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்துக்  கடையலாகவும், பொரியலாகவும் செய்து பயன்படுத்தலாம். துத்திக்கீரை மிகச் சிறந்த ருசியை உடையது அல்ல; என்றாலும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது.

இந்தக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்காமல் சமைப்பது நல்லது. துத்தியின் கொழுந்தைக் கிள்ளித் துவையல் அரைத்துச் சுடுசோற்றுடன் சாப்பிடலாம். துத் திக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.துத்திக்கீரையைப் பச்சரிசி அல்லது துவரம் பருப்புடன் சேர்த்துச் சமையலாக்கிச் சாப்பிட்டால் வாயுவைக் கண்டிக்கும். மலத்தை இளக்கும்.

துத்திக்கீரை உண்பதால் உண்டாகும் நன்மைகள்
1) குடல் புழுக்கள், வாயுவினால் ஏற்படும் நோய்கள், இடுப்பு வலி ஆகியவை நீங்கும். (ஒரே நாளில் குணமாகும் என்று எதிர்பார்க்கக்கூடாது. தொடர்ந்து மூன்று வாரங்க ளாவது கீரையைச் சாப்பிட்டால்தான் பிணிகள் அகன்று நன்மைகள் படர்ந்துவரும்.)

2) துத்திக்கீரை கஷாயத்தைச் சர்க்கரை சேர்த்துத் தினமும் மூன்று வேளை அருந்தினால் குடல்புண், நீர்ச்சுருக்கு, சொறி, சிரங்கு, காமாலை ஆகிய நோய்கள் குணமாகும்.

3) துத்திக்கீரை சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சுண்டக் காய்ச்சிக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் கரப்பான் நோய் விலகும்.

4) துத்தி இலைக் கஷாயத்துடன் பாலும், சர்க்கரையும் கலந்து உட்கொண்டால், மலச்சிக்கல், ஆசனக் கடுப்பு, மேகச் சூடு ஆகியவை குணமாகும்.

5) துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளித்தால் பல் மற்றும் ஈறுகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

6) முறிந்த எலும்பை ஒட்ட வைக்க இந்தக்கீரை உதவுகின்றது. முறிந்த எலும்பை ஒன்று சேர்த்து அதன்மீது துத்தி இலையை அரைத்து வைத்துக் கட்டி அதன்மீது து ணியைச் சுற்றி, அசையாமலிருக்க மூங்கில் பத்தை வைத்துக் கட்டினால், முறிந்த எலும்பு இணைந்துவிடும்.

7) உங்களுக்குக் கடுமையான சுளுக்கு இருக்கிறதா? சுளுக்கு உள்ள இடத்தில் துத்தியை கீழ் நோக்கி மெதுவாகத் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்த பின்னர், வெந்நீர்  ஒற்றடம் கொடுங்கள். ஒரு வாரம் செய்யவும். சுளுக்கு, உங்களை விட்டு தளுக்காக ஓடிவிடும்.

8) துத்தி இலையைக் காய வைத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.இது தோல் சம்பந்தமான வியாதிகளுக்கு அருமையான மருந்தாகும்.

9) துத்தி இலையை அரைத்து வேனில் கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து சீழ் வெளியேறும்.

10) துத்தி இலையின் சாற்றுடன் பச்சரிசி மாவைக் கூட்டிக் களி கிண்டி, சிலந்திக் கட்டிகளுக்கு வைத்துக் கடடினால் அவை பழுத்து உடையும்.
தவசிக்கீரை
முன்னாளில் தவமுடையோர்,இக்கீரையை மட்டும் மிகவும் விரும்பி உண்டு வந்தனர்.அதனால் இக்கீரைக்குத் தவசிக்கீரை என்று பெயர் வந்தது. இந்தக் கீரையைப்  பச்சையாக உண்ணலாம். அனைத்துச் சத்துக்களும் முழுமையாக நிறைந்த கீரை தவசிக்கீரையாகும். அனைத்து வைட்டமின்களும் தவசிக்கீரையில் இருப்பதால் இது ‘மல்டி  வைட்டமின் கீரை’ என்றும் அழைக்கப்படுகிறது. தவசிக்கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் மிக அதிக அளவில் உள்ளன.இக்கீரையின் இலைகளையும், இளந்தண்டுகளையும் சமைத்து உண்ணலாம். கீரையுடன் பாசிப்பயறும் அல்லது துவரம் பருப்பும் சேர்த்துக் கூட்டு செய்யலாம். இக்கீரையைத் தனியாகக் கடையவும்  செய்யலாம். தொடர்ந்து தவசிக் கீரையை உண்டு வருவோர், உடல் வன்மையும், மனத் தெம்பையும் பெறுவர்.

தவசிக்கீரை உண்பதால் உண்டாகும் நன்மைகள்:
1) எலும்பு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. தவசிக்கீரையில் மணிச்சத்து (பாஸ்பரஸ்) நிறைந்திருப்பதே காரணமாகும்.

2) தவசிக்கீரையில் இரும்புச்சத்து உள்ளதால், ஹீமோ குளோபினை அதிகரித்து, இரத்தத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

3) உடற்கட்டையும், உடல் வனப்பையும் அதிகரித்து இளமைப் பொலிவூட்டுகிறது.

4) மூர்க்கக் குணங்களை ஒழித்து, மனதைச் சாந்தப்படுத்துகிறது.
குதிரைக்குளம்புக் கீரை
குதிரைக் குளம்புக் கீரையின் இலைகள் விசித்திரமானவை. இதனுடைய இலைகள் குதிரையின் பாதங்களைப் போல இருப்பதால் இக்கீரைக்கு, ‘குதிரைக் குளம்புக்கீரை’ என்று பெயர் வந்தது. இது தரையில் படரும் சிறு கொடி வகையைச் சேர்ந்தது.பல இடங்களில் இது தன்னிச்சையக வளரும் இயல்பு படைத்தது. இக்கீரையைக் கடைந்தும்,  பொரியல் செய்தும் உண்ணலாம்.ஏதேனும் ஒரு பருப்புடன் சேர்த்துக் குழம்பு வைத்தும் சாப்பிடலாம்.

இக்கீரையை உண்பதால் உண்டாகும் நன்மைகள்:
1) இக்கீரையைச் சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு உண்டாகும்.

2) இக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் வாயுக் கோளாறுகளை இது விரட்டி விடுகிறது.

3) இக்கீரையை உண்டு வந்தால் வாதநோய் வராமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

4) இரத்த அழுத்தத்தைச் சமன்படுத்தும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.

5) இக்கீரையை உண்டு வருவோர் சன்னி நோய் வராமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
காசினிக் கீரை
சிக்கரியின் (chicorry) இலைக்குத்தான் காசினிக் கீரை என்று பெயர். இது சுமார் இரண்டு மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.இதனுடைய ஆணிவேரிலிருந்து தான் சிக்கரித்தூள் தயார் செய்து,சுத்தமான காபிப் பொடியுடன்கலந்துவிடுகிறார்கள்.காபித்தூளுடன்,சிக்கரித்தூளை அளவுடன் கலக்கும்போது அது மிகச் சிறந்த காபித் தூள் ஆகிறது.

காசினிக்கீரைச் செடியின் பூக்கள் நீலநிறத்தில் இருக்கும். தோட்டக்கால் நிலங்களில் வடிகால் வசதியுள்ள பகுதிகளில் இச்செடி நன்கு வளரும். செம்மண் நிலப்பகுதியில் நல்ல விளைச்சலைத் தரும்.சிக்கரியின் பச்சை வேரில் கீழ்க்கண்ட பொருள்கள் அடங்கியுள்ளன.

1) கோந்துப் பொருள் - 7-5%

2) குளுகோஸ் - 1-1%

3) கசப்பைத் தரும் பொருள் - 4-0%

4) கொழுப்பு - 0-6%

காசினிக்கீரைச் செடியின் விதை இளம் பழுப்பு நிறமாக இருக்கும். காசினி விதையைச் சர்பத்துடன் சேர்த்துப் பருகுவார்கள்.

காசினிக் கீரையிலுள்ள சத்துக்கள்:
1) புரதம் - 1-9 கிராம்.

2) கொழுப்பு - 0-7 கிராம்.

3) மாவுப் பொருள் - 4-6 கிராம்.

4) கால்சியம் - 94 மில்லி கிராம்.

5) பாஸ்பரஸ் - 21 மில்லி கிராம்.

6) இரும்பு - 8 மில்லி கிராம்.

7) கலோரிகள் - 77 மில்லி கிராம்.

காசினிக் கீரை உண்பதால் உண்டாகும் நன்மைகள்:
1) கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து உண்டால், இரத்த விருத்தி உண்டாகும்.

2) இரத்தத்தைத் தூய்மைப்படுத்தும்.

3) சிவப்பு அணுக்களைப் பெருக்கி, ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.

4) வீக்கங்களைக் கரைத்துவிடும்.

5) உடல் சூட்டைத் தணிக்கும்.

6) சிரங்கு, முகத்தில் பரு, கட்டி போன்றவை உண்டாகாமல் தடுக்கும்.

7) இரத்தத்தில் அதிகமாக உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.
முட்டைக்கோஸ் கீரை
முட்டைக்கோஸுக் கீரை உருண்டு திரண்டு காய் போலக் காணப்பட்டாலும், இது கீரை இனத்தைச் சேர்ந்ததுதான். இதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை.முட்டைக்கோசு கீரைதான் என்பது இன்னமும் பல பேருக்குத் தெரியாத விஷயமாகும்.இந்த முட்டைக்கோஸுக் கீரையைப் பக்குவமாய் அவித்தாற்போல வேக வைத்துச்  சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதிலுள்ள சத்துக்கள் அழிந்து போய்விடும். முட்டைக்கோஸுக் கீரையை நாம் பச்சையாகக்கூட உண்ணலாம். கோஸைப்  பொடிப்பொடியாக நறுக்கி,இதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து,கொஞ்சம் உப்புக் கூட்டிப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். சுவை அலாதிச்சுவையாக இருக்கும்.

முட்டைக்கோஸ் கீரையில் வைட்டமின்கள் A, B, C ஆகியவை அதிகமாக உள்ளன. இத்துடன் புரதம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து, முதலியவைகளும் உள்ளன. இதன்மேல் பக்கத்திலுள்ள பச்சை இலைகளில்தான் சத்துக்கள் அதிகம்.அதைப் பொடியாக நறுக்கிக் காடி சேர்த்து மேலை நாடுகளில் சாப்பிடுகிறார்கள். அதனால் அதை  ஏதேனும் ஒரு விதத்தில் பக்குவப்படுத்தி உண்டு வந்தால்,அதிலுள்ள உயிர்ச்-சத்துக்கள் அனைத்தையும் அதிகமாகப் பெறலாம்.
முட்டைக்கோஸ் கீரை உண்பதால் உண்டாகும் நன்மைகள்:

1) இது மலத்தை இளக்கிக் கொடுத்து மலச்சிக்கலையே நீக்கவல்லது.

2) இதில் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

3) இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி, நம் ஆரோக்கியத்தைக் காக்கும்.

4) சிவப்பு அணுக்களில் ஹீமோ குளோபினை அதிகரிக்கச் செய்யும்.

5) இரத்த சோகையை நீக்கும்.

Ingen kommentarer:

Legg inn en kommentar