23.1.11

மிளகு


கேரளம், கொச்சி, குடகு, மைசூர் முதலிய மலை நாடுகளில் பயிராகும் ஒருவகைக் கொடியாகும். இது மரங்களைச் சுற்றி அதன் மேல் ஏறி அடர்த்தியாக வளரும். இதன் பழத்திற்கு மிளகு என்பது பெயர். மிளகிற்கு, குறுமிளகு மலையாளி, கறி, காயம், கோளகம், திரங்கல், மரியல் என்ற வேறு பெயர்களும் உண்டு. மிளகுப்பழத்தின் தோல் உதிர்ந்தால் அதை ‘‘வெள்ளை மிளகு’’ என்று சொல்வார்கள்.
மிளகு மிகவும் முக்கியமான இயற்கை மருத்துவப் பொருள் ஆகும். சித்த மருத்துவத்தில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருள்களும் முக்கியமானவை ஆகும். இதில் மிளகு நடுவாக இருந்து நமக்கு நன்மை செய்யும். பொதுவாக மிளகு, நாடி, நடை தளர்ந்தபோது விரைவினை மிகுதிப்படுத்தி உடலில் வெப்பத்தைக் கொடுக்கும், ஒரு அற்புதப் பொருளாகும். மிளகு உணவைச் செரிப்பிக்கும். வாயுவை நீக்கும். நாம் சாப்பிட்ட உணவு எளிதாகச் செரிப்பதற்கு மிளகு உற்ற துணையாக இருக்கிறது. ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் முதலிய எல்லா அசைவ உணவுகளில் மிளகு முக்கியமாகச் சேர்க்கப்படுவதன் நோக்கம், விரைவில் செரிமானம் ஆவதற்குத்தான்! இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்துவிட்டால் அந்தக் கொழுப்பை மிளகு கரைத்து விடுகிறது.

மிளகை வறுத்து இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு இந்தச் சூரணத்தில் கால் தேக்கரண்டி அளவு எடுத்து, அதில் தேனைக் குழைத்து உண்டு வந்தால் வாயு, கபம், அஜீரணம், மிகுந்த ஏப்பம் ஆகியவை நீங்கும். பசி உணர்வை ஏற்படுத்தும். பசியைத் தூண்டும்.

மிளகு, வெங்காயம், உப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் பூசி வந்தால் புழு வெட்டுப் போய் விடும். தலையில் புதிய மயிர்கள் முளைக்க ஆரம்பிக்கும். (ஒரு தேக்கரண்டியளவு மிளகு, சிறிய வெங்காயம் 3 அல்லது 4, உப்பு ஒரு சிட்டிகை)

300 மில்லி தண்ணீரில் அரை தேக்கரண்டி மிளகுத் தூளைப் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். பின் அந்தத் தண்ணீரை வடிகட்டி அதில் தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தொண்டைக்கம்மல், தொண்டைப்புண் குணமாகும். வயிற்று நோய்கள் மறைந்து விடும்.

மிளகு பக்கவாதம், குளிர் காய்ச்சல், கோழை, குன்மம், வாயு, சுவையின்மை, மூலம், பிரமேகம், இருமல், குஷ்டரோகம், சோணித வாதம், காசநோய், காதுவலி, ரத்தகுன்மம், காமாலை, செரியாமை என்று பல பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறது. நமக்காக மன ‘‘மிளகும்’’ அற்புத மருந்துப்பொருள் எது என்றால் அது மிளகுதான்!

நல்லெண்ணெய் (அ) தேங்காயெண்ணெயில் ஏதாவது ஒரு எண்ணெயில் மிளகைப் போட்டு நன்கு காய்ச்சி வைத்துக்கொள்ளுங்கள் இந்தத் தைலத்தைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டு, குளித்து  வாருங்கள். வாரம் ஒரு முறை போதும். தலைக்கனம், நாட்பட்ட வலி, நோய்கள், பாண்டு இருமல், தலைவலி, நீர்க்கோவை ஆகிய பிணிகள் பறந்தோடி விடும்.

மிளகு உங்களுக்குப் பக்க பலமாக இருக்கும் மருந்துப் பொருள் என்பதை மறந்து விடாதீர்கள்! பத்து மிளகு இருக்குமானால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்ற பொன்மொழியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் நச்சுத்தன்மை இருந்தால் அதை முறியடித்து வெளியே கொண்டு வரும் ஆற்றல் பெற்றது, மிளகு.


இன்னொரு முக்கிய விஷயம்!
நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து மிளகைச் சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வாருங்கள். ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு பக்கவாதம், இருதயத்தாக்குதல் என்பது என்றைக்கும் வராது. வருடக்கணக்கில் கூட சாப்பிட்டு வாருங்கள் மிகவும் நல்லது.

Ingen kommentarer:

Legg inn en kommentar