15.5.11

செர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்

செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை.இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை. "பிணிகள் பிடிக்காத செடி" என்றே இதைச் சொல்லாம். மேலும் இதன் அருகில் வந்து ஆடு, மாடுகள் மேய்வதில்லை. போர்ட்டோ ரிகே, செர்ரிபார்படோஸ் செர்ரி என்பன செர்ரிப்பழத்தின் வேறு பெயர்கள். தமிழில் "அற்புத நெல்லி" என்று வழங்கப்படுகிறது.
இது புதர்வகைச் செடியாகும். நான்கு அடி முதல் ஐந்து அடி உயரம் வரை அடர்ந்து தழைத்து வளரும். இவைகள் கரும்பச்சை நிறத்திலும், பழங்கள் சிறிய ஆப்பிள் வடிவத்திலும் இருக்கும்.
பழங்கள் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இந்தச் செடியை நட்டு ஏழு மாதத்திற்குள் பயன் தரக்கூடியது. பழம் தரக்கூடியது. ஒரு செடியிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு கூடைகள் பழம் கிடைக்கும். இந்தச் செடியை விவசாயிகள் மட்டுமே வளர்க்க முடியும் என்றில்லை நாமும் நம் வீடுகளில் வளர்த்துச் சிறந்த பலனைக் காணலாம்.
செர்ரி செடி தாவர இயலில் "மல்பீஜஸியாஸ்" குடும்பத்தைச் சேர்ந்தது. செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது.
எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும். உங்கள் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். செர்ரிப் பழத்தைக் கொண்டு ரசம், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஆகியவை தயாரிக்க முடியும்.
தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும். இதுதான் செர்ரிப் பழ ஜூஸ்.
செர்ரிப் பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிவிட வேண்டும். சம அளவு சர்க்கரை சேர்த்துத் தேவையான விகிதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிட வேண்டும். தகுந்த பதத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இதுவே அருமையான செர்ரி ஜாம் ஆகும்.
ரொட்டித் துண்டுகளை இந்த ஜாமில் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு இந்த ஜாமைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
செர்ரி காய்களை நறுக்கி உப்பில் கலந்து அவைகளை வெயிலில் காய வைக்கவேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்தபின் அவைகளுடன் இஞ்சிச் சாறு, மஞ்சள் தூள் ஆகியவைகளைப் போட்டுக் குலுக்க வேண்டும்.
அதன்பின் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தாளியுங்கள். அதன்பின் அந்தக் கலவையைப் பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar