9.4.12

நீரிழிவு நோயாளிகளும் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை செய்யலாம்


இன்றைய அவசர உலகில் இயந்திரத்தனமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தினரை ஆட்டிப் படைக்கும் நோய்களில் மூட்டுவலி பிரதான இடம் வகிக்கின்றது. எனவே அது தொடர்பில் மூட்டு மாற்று சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் நந்தகுமார் தரும் விளக்கங்களையும் ஆலோசனைகளையும் பார்ப்போம்.

மூட்டு வலிக்கும் உடற்பருமனுக்கும் எத்தகைய தொடர்பு இருக்கிறது?

உங்களுடைய உடலின் முதுகுப் பகுதியில் முப்பது கிலோகிராம் எடையுள்ள ஒரு பையைக் கட்டித் தொங்க விடுகிறேன். அதனைச் சுமந்து கொண்டே நீங்கள் உங்களுடைய அனைத்துக் காரியங்களையும் செய்கிறீர்கள் என்றால், முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, தோற்பட்டை வலி என சகல பகுதிகளிலும் வலி ஏற்படும். ஒரு வாரம் சென்ற பின் முதுகில் பொருத்தப்பட்ட முப்பது கிலோ எடையை அகற்றிவிட்டால்... நீங்கள் திருப்தியான  மாற்றத்தை உணர்வீர்கள்.“ இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். உங்களுடைய உயரத்திற்கேற்ற எடையை விடக் கூடுதலான எடையை சுமந்துகொண்டேயிருக்கிறீர்கள். இதனால் உங்களின் எடையைத் தாங்கிக் கொண்டிருக்கும் கால் மூட்டு, கணுக்கால் மூட்டு தேய்வடையத் தொடங்குகிறது. அதே தருணத்தில் தொடர்ந்து உடற் பயிற்சி செய்தால் உடல் எடை கட்டுக்குள் இருப்பதுடன் தசைகள் வலிமையடைந்து மூட்டுகள் தேய்மானம் தடுக்கப்படுகின்றது. அதனால்தான் உடல் எடை அதிகமாக இருப்பவர்களும் உடற்பருமனாக உள்ளவர்களும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறோம்.
அதேபோல் முதுகு வலிக்கு வயிற்றுப் பகுதி மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை உறுதியாக வைத்திருக்க வேண்டும். இந்தப் பகுதியில் தசைகளை வலுவுடன் வைத்திருக்காவிட்டால் தொப்பை உருவாகும். இதுதான் முதுகு வலிக்கு மூலகாரணம்.
எலும்புகளுக்கு இடையேயுள்ள சவ்வுகள் வலுவிழந்து போகும் போதுதான், எலும்புகள் ஒன்றோடொன்று உராய்கின்றன. இப்படி உராய்வதால் வலி ஏற்படுவதைத்தான் ஆர்த்தரைட்டீஸ் என்று குறிப்பிடுகிறோம்.

உடற்பருமன் இல்லாமல் பார்ப்பதற்கு கச்சிதமாக இருப்பவர்களில் மிகச் சிலருக்கு எலும்புகளுக்கிடையே யிருக்கும் சவ்வு வலுவில்லாமல் இருக்கும். இத்தகையோருக்கும் முதுமைக்கு முன்னரே மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி என எல்லா எலும்பு இணைப்புகளிலும் வலி உருவாகும். பரம்பரை காரணமாக ஏற்படும் இத்தகைய சிக்கல்களுக்கு தற்போதைய மருத்துவத்துறை மாத்திரைகளையும் ஒரு சிறிய அளவிலான சத்திரசிகிச்சையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை மேற்கொண்டால் மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம். மேலும் இவர்கள் தொடக்க காலத்திலிருந்தே எடையை அதிகமாகத் தூக்கக்கூடாது. உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
மூட்டு வலியை தொடக்க காலத்தில் அலட்சியப்படுத்தியவர்களுக்கும் சிகிச்சையை உரிய காலத்தில் மேற்கொள்ளாதவர்களுக்கும்தான் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையைச் செய்யப் பரிந்துரைக்கிறோம்.

மூட்டு மாற்று சத்திர சிகிச்சை, இடுப்பு மாற்று சத்திர சிகிச்சை, தோற்பட்டை மாற்று சத்திர சிகிச்சை ஆகியவற்றின் ஆயுள் தன்மை எவ்வளவு?
பத்தாண்டுகளுக்கு முன் இத்தகைய அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு நாங்கள் இருபதிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் வரை உத்தரவாதம் அளித்தோம். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆக்சீனியம் என்ற உலோகத்தாலான பொருளை, சத்திர சிகிச்சையின் போது நோயாளிக்குப் பொருத்துவதால் அவர்கள் விரைவில் குணமடைவதுடன், அதன் ஆயுளும் அதிகரிக்கிறது. அதாவது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கக்கூடியவை என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம். மூட்டுகளுக்கிடையே பொருத்தப்படும் பிளாஸ்டிக்கிலான சவ்வுகளின் ஆயுள், நோயாளியின் உடல் இயக்கம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து இது அமைகிறது.  இளம் வயதிலேயே மூட்டு மாற்று சத்திர சிகிச்சையைச் செய்து கொள்பவர்களுக்கு "ஒபரேஷன் வித் அவுட் சிமெண்ட்' என்ற நவீன முறையிலான சத்திர சிகிச்சையை செய்து அதிகபட்ச பலனை வழங்கி வருகிறோம்.
 
மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை எந்த நிலையில் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்வீர்கள்?
மூட்டுவலியை தொடக்க காலகட்டத்திலேயே கண்டறிந்து மருந்துகளால் தீர்வு காண இயலாத போது ஆர்த்தரைஸ் கோப்பிக் எனப்படும் சாவித் துவார நுண்ணறுவை சிகிச்சை மூலம் சத்திர சிகிச்சை செய்து இயல்பாக இருக்கின்ற மூட்டினை மேலும் தொடர்ந்து சிறப்பாகச் செயற்பட வைக்கிறோம். இந்த நிலையில் மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையால் மூட்டுகளுக்கிடையே உள்ள சவ்வானது. இயல்பான செயற்பாட்டிற்கேற்றவாறு வளர்ச்சியடைகிறது. ஆனால், இந்தச் சவ்வு முழுமையான தேய்மானமடைந்து அதிகபட்ச வலியுடன் வருபவர்களுக்குத்தான் மூட்டுமாற்று சத்திர சிகிச்சையைப் பரிந்துரைக்கிறோம்.

நீரிழிவு நோயாளியாக இருப்பவர்கள் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ளலாமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு அவ்வித சத்திர சிகிச்சையால் பின்விளைவு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு அதிகமிருந்தாலும் இதனைச் செய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். ஏனெனில், நீரிழிவு என்பது ஒரு குறைபாடே தவிர நோயல்ல. அதற்காக மூட்டு மாற்று சத்திர சிகிச்சையையே செய்யக்கூடாது என்பதை மருத்துவத்துறை ஏற்கவில்லை. இத்தகையோருக்கு முதலில் நாங்கள் நீரிழிவை கட்டுக்குள் கொண்டுவந்த பின்பே சத்திர சிகிச்சையை மேற்கொள்கிறோம். மேலும் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள அதிக நேரம் தேவையில்லை என்பதால் சீனியை கட்டுக்குள் கொண்டுவருவதும் எளிது. எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் கவனம் என்ற ஒரேயொரு நிபந்தனையுடன் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை செய்துகொள்ளலாம். அத்துடன் மருத்துவர் எப்போது பரிந்துரைக்கிறாரோ அப்போதுதான் செய்துகொள்ள வேண்டும். அதனைப் புறக்கணிக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ கூடாது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவத்தின் போது இடுப்பு எலும்பு விரிவடைவதால் அவர்கள் முது மையடையும் முன்னரே இடுப்பு எலும்பு பழுதடையத் தொடங்குகிறது. இந்நிலையில் அவர்களுக்கு எத்தகைய தருணத்தில் இடுப்பு எலும்பிற்கான மாற்று தேவைப்படுகிறது?
பெண்களின் மாத விடாய் நின்ற காலத்திலிருந்து ஈஸ்ட் ரோஜன் என்னும் ஹோர்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சமச் சீரற்ற தன்மையினால் எலும்பில் உள்ள கல்சியத்தின் அளவு வேகமாகக் குறையத் தொடங்குகிறது. இதனால் இடுப்பு எலும்பு பலவீனமடைகிறது. அதனால்தான் பெண்கள் மெனோபாஸ் நின்றவுடன் மருத்துவரை ஆலோசித்து உடற்பயிற்சி செய்வதுடன் கல்சியம் சத்துள்ள மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும் என்று ஆலோசனை சொல்லி வருகிறோம்.

இருசக்கர வாகனத்தில் அதிகமாகப் பயணம் செய்பவர்களுக்கு இடுப்பு வலி, தோற்பட்டை வலி கழுத்து வலி ஆகியவை ஏற்படும் என்பது உண்மையா?
இது மருத்துவ ரீதியாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இரு சக்கர வாகனத்தில் சென்றாலும் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் சென்றாலும் தினசரி உடற்பயிற்சிசெய்து தசைகளை இறுக்கமாக வைத்திருப்பவர்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு உடலுழைப்பு குறைவதால் உடல் எடை அதிகரிக்கிறது. அதனால்தான் வலி ஏற்படுகிறது. வாகனத்தை ஓட்டுவதால் அல்ல.
dr_nanthankumar_G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar