
இன்றைய நாட்களில் மன அழுத்த நிலை குறித்து பலராலும் பேசப்படுகின்ற விடயமாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்த நிலை கொண்டவராக அல்லது அதன் அடையாளங்கள் கொண்டவராக காணப்படுகின்றனர். கவலை, ஏக்கம், கோபம், பதைபதைப்பு அல்லது பயம் கலந்த உணர்வாகவே மன அழுத்தம் காணப்படுகிறது.
இன்றைய நவீன கால கட்டத்தில் ஆண், பெண் இருபாலாரையும் வயது வேறுபாடின்றி எல்லா நிலையிலுள்ளவர்களும் வெவ்வேறு விதமான அழுத்த நிலைக்கு உட்படுகின்றனர். இந்த மன அழுத்த நிலை 90 சதவீத நோய்களுக்கான காரணமென மருத்துவவியல் ஆய்வுகள் தெரிவிப்பதோடு இதனை ஒரு வகை மனநோய் என்றும் கூறுகின்றனர்.
அழுத்தம் என்பது கவலை, ஏக்கம், கோபம், பதைபதைப்பு அல்லது பயம் கலந்த உணர்வுகளாகவும் இருக்கும். ஒரு வேலையை செய்து முடிக்க அல்லது வெற்றிபெற அழுத்தி நெருக்கி வைத்துள்ள நிலை இது. சில வேளைகளில் மன அழுத்த நிலை ஒருவனுடைய வாழ்வையே சீர்குலைக்கும் அளவுக்குப் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணலாம். சில வேளைகளில் மன அழுத்த நிலை ஒருவனை சிந்திக்க, ஆக்கபூர்வமாக செயற்பட, கடினமாக உழைக்க, ஒரு சாதனையை செய்து முடிக்க தூண்டலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான மன அழுத்த நிலைகள் ஏற்படுகின்றன.
அதிக மன அழுத்த நிலை ஒருவனுடைய உணர்வு அல்லது ஆன்ம நலனைப் பாதிக்கும் போது எக்குதலாகின்றது என்ற கருத்தையே மனநோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மன அழுத்தமும் நோய்களும் மன அழுத்தத்தின் போது உடலில் சுரக்கப்படும்"கார்டி கோஸ்டெரோன்' ஹோர்மோன் எலிகளின் நினைவுத் திறனை பலவீனப் படுத்துவதாக கலிபோர்னிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாதிப்பு மனிதர்களுக்கும் ஏற்படுவதாக இவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மன அழுத்தம் உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் ஆகியவற்றின் மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்புத் திறனை வலுவிழக்கச் செய்கிறது. இதனால் எளிதில் நோய் தொற்றுகள் தோன்றி கெடுதல்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயாளர்களிடம் காணப்படுகின்ற மன அழுத்த நிலை இரத்தத்தில் சீனியை நேரடியாக உயர்த்தாது விட்டாலும் சிகிச்சை முறைகளை சரியாக மேற்கொள்ள முடியாது இருப்பதுடன் நீரிழிவு நோயாளி உணர்ச்சியுடன் மன அழுத்தம் கொள்ளும் போதும் சக்கரையின் அளவு இயல்புநிலையை விட உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படுகிறது. இந்த நிலைக்கு நிலையற்ற நீரிழிவு நோய் என்பார்கள். இதுபல தீய விளைவுகளை ஏற்படுத்துவதோடு சிகிச்சையையும் கடினமாக்குகிறது.
தொடர்ச்சியான மன அழுத்த நிலையே சொரையாஸிஸ், வெண்குஷ்டம் உட்பட பல்வேறு தோல்நோய்கள், ஜலதோஷம், குடல் புண், தலைவலி போன்ற நோய்கள் உண்டாவற்கான காரணங்களைத் துரிதப்படுத்துகின்றது. மன அழுத்தமே குடல் புண் வியாதியை மேலும் அதிகரிப்பதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற பூகம்பமொன்றின் பிறகு குடல் புண் (அல்சர்) நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்றுக் கொண்டமை அறியப்பட்டுள்ளது.
பெண்களும் மன அழுத்தமும்
சதா கவலையுடன் இருக்கும் பெண்கள் மற்றப் பெண்களை விட அதிகளவில் தசைப்பிரச்சினைக்கு உட்படுவதாக ஒரு மருத்துவத் தகவல் கூறுகின்றது.அத்தோடு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மன அழுத்தமடைவதால் குழந்தைகளின் எடை குறைவடைவதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவர்களின் ஆய்வுகளின் படி பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அதிக மன அழுத்தங்களுக்கு உட்படுவதாக அறியப்படுகின்றது. இங்கிலாந்தில் ஆவன் பகுதியில் 1991 ஏப்ரல் முதல் 1992 டிசம்பர் வரை 9000 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கர்ப்பிணிகளுக்கு 18 ஆவது வாரத்தில் 11.8 சதவீதம் இருந்த மன அழுத்தம் 32 ஆவது வாரத்தில் 13.5 சதவீதமாக அதிகரிக்கின்றது. குழந்தை பிறந்த பிறகு 8 ஆவது வாரத்தில் 9.1 சதவீதமாகவும் 8 ஆவது மாதத்தில் 8.1 சதவீதமாகவும் மன அழுத்தம் குறைவடைவதாக அறியப்படுகிறது.
கர்ப்பிணிகளின் மன அழுத்தம் குழந்தையின் எடையை குறையச் செய்யும் என்பதும் ஆய்வில் தெரியவந்தது. குழந்தை பிறந்த பிறகு இருக்கும் மன அழுத்தம், குடும்பத்தாரர் மற்றும் குழந்தை மீது அக்கறையின்மை மற்றும் தற்கொலைக்கும் வழிவகுக்கும் என்கின்றனர். பத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் மனஅழுத்தம் அடைவதாகவும் அறியப்படுகிறது.
என்ன தீர்வு?
எப்போதும் மன மகிழ்சியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன உளைச்சலைத்
தரக் கூடிய சூழ் நிலையை தவிர்க்க முயற்சிப்பதோடு நடப்பதெல்லாம் நன்மைக்கே
என்ற மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.நெருக்கமான நட்பையும் மற்றவர்களுடன் சிறப்பான நல்லுறவையும் வளர்த்துக் கொள்ள நேரத்தை செலவிடுங்கள். மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களது தவறுகளைப் பெரிதுபடுத்தாது அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அவர்களும் உங்கள் தவறுகளை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் அல்லவா? மற்றவர்களையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள பழகினால் மன அழுத்தம் வெகுவாக குறைவடையும்.
மன அமைதி நாடுவார் இறைவழிபாடு, தியானம் போன்றவைகளில் ஈடுபடுவதோடு உடல் இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் போக்கும் தியானப் பயிற்சிகள், யோகாசன முறைகளையும் முறையாக கற்றுக் கடைப்பிடிப்பதும் மன அமைதியைத் தரும்.
விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதோடு நீங்கள் உங்கள் நண்பர்களிடம் காட்டும் இணக்கத்தையும் கனிவையும் வீட்டிலுள்ளவர்களிடம் காட்டுங்கள். மன அழுத்தம் எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை தடுக்கும் வழி உங்கள் கையில்தான் உள்ளது.

Ingen kommentarer:
Legg inn en kommentar