26.1.11

சுப்பிரமணியரைப் போலச் சிறந்த தெய்வமும் இல்லை. சுக்கைப் போலச் சிறந்த மருந்தும் இல்லை'


சுப்பிரமணியரைப் போலச் சிறந்த தெய்வமும் இல்லை. சுக்கைப் போலச் சிறந்த மருந்தும் இல்லை' என்றொரு பழமொழி உண்டு. இஞ்சி காய்ந்தால் இஞ்சியைச் சாம்பலில் பூசிக் காய வைத்தால் சுக்காகிறது. இந்தச் சுக்கையும் அவ்விதமே பயன்படுத்தாமல், சுண்ணாம்பு தடவி நிழலில் காயவைத்து எடுத்து அதன் பின்னரே உபயோகிக்க வேண்டும். 
இவ்விதம் காய வைத்து எடுத்த சுக்கை அடுப்புத் தணலில் போட்டுக் கருகிவிடாமல் சுட்டு எடுக்க வேண்டும். பின்னர் தோலைச் சுரண்டி எடுத்த பின் இடித்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தச் சுக்குப் பொடியைக் குடிநீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆறிய பின் குடிப்பது மிகவும் நல்லது.

நல்ல ஜீரண சக்தி ஏற்பட உதவுகிறது. வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கிறது. நண்பகல் உணவு உண்ணும் போது முதல் சோற்றில் தினமும் சிறிதளவு சுக்குப்பொடி கலந்து உண்ண வேண்டும். இவ்விதம் உண்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் ஏற்படாது.

இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தவும் சுக்குப்பொடி உதவுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றுமே திரிகடுகம் என வழங்கப்படும். நினைவு இழந்து படுத்திருப்போர் மூக்கில் திரிகடுகப் பொடியை வைத்து ஊதினால் உணர்வு பெறுவார்கள்.

உங்களுக்கு நன்கு ஜீரணமாகவில்லையா? சுக்கு, மிளகு, ஓமம் ஆகியவைகளைப் பொடி செய்து கொள்ளுங்கள். மண் சட்டியில் போட்டுத் தேன் கலந்து கிளறி லேகியம் போன்று செய்து கொள்ளுங்கள். தினமும், காலை மாலை நெல்லிக்காய் அளவு உண்டுவர, ஜீரணமாகும். நல்ல பசியும், ருசியும் ஏற்படும். (சட்டி பரந்த மண் சட்டியாக இருக்க வேண்டும்.)

திரிகடுகத்தூளை வெந்நீரில் போட்டு இருவேளை பருகிவரின் அஜீரணம், வயிற்று வலி ஆகியவை குணமாகும். சுக்கின் மேல் தோலைச் சீவுங்கள். பிறகு இதைச் சிதைத்து, பனைவெல்லத்தைப் போட்டு இடித்துச் சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை, மாலை, ஒவ்வொரு உருண்டையாகத் தின்று வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

சுக்கு, கிராம்பு, ஓமம் ஆகியவைகளைப் பொடித்துத் தேன் விட்டுக் கிளறிப் பதப்படுத்தி வைத்துக் கொண்டு தினமும் காலையில் ஒருவேளை உண்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

சுக்குத்தூளைக் கொதிக்க வைத்து மூட்டுக்களில் பூசி வர, வீக்கம் வடியும். திரிகடுகுத் தூளில் தேன் கலந்து சாப்பிட்டால் சீதளம் குணமாகும். சுக்குத் தூளைச் சுடு சோற்றில் போட்டு, விரவிச் சாப்பிட்டு வந்தால், உடலின் கனத்தைப் போக்கிச் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். இளமையுடன் நீங்கள் என்றைக்கும் இருப்பதற்கும் உதவும்.

சுக்கு, மிளகு ஆகியவற்றுடன் கொஞ்சம் வெற்றிலையை வைத்துச் சிதைக்க வேண்டும். இக்கலவையுடன் தண்ணீர் கலந்து கஷாயம் வைத்துப் பருகினால் வாயுத் தொல்லை ஓயும். இக் கஷாயத்தைத் தினசரி நீங்கள் பருகி வந்தால் நீண்ட நாள் வாழலாம். இக்கஷாயத்தில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. தேவைப்பட்டால், டம்ளரில் கஷாயம் ஊற்றி அருந்தும்போது, ஒரு தேக்கரண்டி, சுத்தமான தேனைச் சேர்த்துக்கொள்ளலாம்.

சுக்குக் காபி நோய் தீர்க்கும் ஆற்றல் பெற்றது. தொண்டைக் கட்டைக் குணப்படுத்தும். உடலுக்குப் பல நண்மைகளைச் செய்யும். காலையில் இஞ்சிச்சாறு பருகுங்கள். மதியம் சுடுசோற்றில் சுக்குப் பொடியைப் போட்டுச் சாப்பிடுங்கள். மாலையில் கடுக்காயைக் கஷாயம் வைத்து பருகுங்கள். இப்படி நீங்கள் முறையாகச் செய்து வந்தால் நரை, திரை, மூப்பின்றி நீண்ட நாள் வாழலாம் என்று தேரையர் கூறியுள்ளார். 

Ingen kommentarer:

Legg inn en kommentar