21.10.11

மாதுளையின் மகிமையே மகிமை!

மா, பலா, வாழை என்று முக்கனிக்கு ஏற்றம் கொடுத்த நம்மவர்கள்கூட மாதுளம் பழத்தை உயர்வாகக் கொண்டாடுவதில்லை. ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு டாக்டர்கள் சொல்லும் அறிவுரையே, மாதுளம் பழத்தை அல்லது சாறை அதிகம் உட்கொள்ளுங்கள் என்பதுதான்.  அந்த மாதுளம் பழம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவக் குணத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்று இப்போதுதான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  வில்லோ மரத்திலிருந்து ஆஸ்பிரின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சமமானது இந்தக் கண்டுபிடிப்பு என்று கூத்தாடுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் "சண்டே எக்ஸ்பிரஸ்' நாளிதழ். மாதுளம் பழத்தைச் சாப்பிடுகிறவர்கள்கூட அதன் கதுப்புகளை உட்கொண்டு கொட்டையைத் துப்பிவிடுகின்றனர். அதன் ரசத்தை மட்டுமே குடிக்கின்றனர்.  ஆனால் அதன் தோல்,விதை, மஞ்சள் நிறத்தில் உள்ளே காணப்படும் மெல்லிய சவ்வுப்படலம், அதன் பட்டை, செடியின் தண்டுக்குள்ளே இருக்கும் சோறு என்று அனைத்துமே அரிய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றிலிருந்து எடுக்கப்படும் சாறு இதயத் துடிப்பைச் சீராக்கும், இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும், ரத்தக் கொதிப்பைக் குறைக்கும், உள் உறுப்புகளின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி போக்கும், புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும், தாம்பத்திய உறவுக்குத் தடையாக இருக்கும் பாலின உறுப்புகளின் செயல்படா தன்மையைப் போக்கும்.  மாதுளம் பழத்தின் அரிய மருத்துவத் தன்மைகள் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இப்போதுதான் தெரிந்திருக்கலாம். நம் நாட்டு ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும் அதன் பலனை ஏற்கெனவே உணர்ந்தவைதான். எல்லாம் சீமையிலிருந்து அறிக்கையாக வந்து "நேச்சர்' பத்திரிகையில் எழுதப்பட்டால்தான் நமக்கு மகிமையே புரிகிறது. மாதுளம் பழம் விலை ஏறுவதற்குள் ஒரு டன் வாங்கிப் பதுக்குங்கள்.
 G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar