2.4.12

தினமும் மூன்று வேளை சாப்பிட்டேயாக வேண்டும்

eating_
வருமானத்தில் காட்டும் அக்கறையை யாரும் வயிற்றுக்கு காட்டுவது இல்லை. விளைவு, அல்சர் என்கிற வயிற்றுப் புண்! அல்சரைத் தவிர்க்க இங்கே ஆலோசனை வழங்குகிறார் குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.ஹரிஹரன்.
நாம் சாப்பிட்ட உணவு 4 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். அதன் பிறகு மீண்டும் வயிற்றுக்குள் உணவைத் தள்ள வேண்டியது அவசியம். இது எப்படி என்றால் வாகனத்திற்கு பெற்றோல் போடுவது போல்தான். ஒரு லீற்றர் பெற்றோல் போட்டாச்சு... வாகனத்தின் மைலேஜ்படி 50 கி.மீ. வண்டி ஓடிவிட்டது என்றால் அடுத்து பெற்றோல் போட்டால்தான் தொடர்ந்து ஓடும் அதுபோல்தான் மனிதனின் வயிறும். சிலர் மதியம் சாப்பிடாமல் இருப்பார்கள்.
அல்லது சாப்பிடத் தாமதம் ஆகும். அதனால் காலையிலே சேர்த்து சாப்பிடுகிறேன் என்று அதிகமாக சாப்பிடுவார்கள். மொத்தமாக சாப்பிடுவதால், அந்த நேரத்தில் மந்தமாக இருக்குமே தவிர, எதிர்பார்க்கிற விடயம் நடக்காது. தினசரி மூன்று முறை உணவு சாப்பிடுவது அவசியம். காலை 9 மணிக்கு சாப்பிட்டால் அடுத்து மதியம் 1 மணியளவில் அவசியம் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் சுறுசுறுப்பு குறையும். மூளை உள்ளிட்ட உறுப்புகள் சோர்வடைந்துவிடும். இது நீண்ட நேரம் தொடர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் பொருந்தும். சாப்பிடவில்லை என்றால் சிறப்பாக செயல்பட முடியாது. வேலை ஆர்வம் குறைந்துவிடும். சந்தையில் ரிஸ்க் எடுக்கலாம். ஆனால், சாப்பாட்டில் ரிஸ்க் எடுக்கக்கூடாது! ...,  என்றவர் சரியான நேரத்துக்கு சாப்பிடவில்லை என்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி விளக்கினார்.
சிலர் உணவைத் தவிர்த்துவிட்டு குளிர் பானம் அல்லது சின்னதாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், கணிசமான கலோரி உடலில் சேரும். ஆனால், அடுத்து கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடும் போது ஏற்கனவே சாப்பிட்டதை கணக்கில் கொண்டு குறைவாக சாப்பிட மாட்டார்கள். ஒரு முழு கட்டு கட்டி விடுவார்கள். அது செரிப்பதற்கான உடல் உழைப்பு இல்லை என்றால் அது கொழுப்பாக மாறிவிடும். இதனால், உடல் பருமன் ஏற்படும். கூடவே, நீரிழிவு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் வரக்கூடும்! நீண்ட நேரமாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் உணவு செரிமானம் ஆவதற்காக சுரந்த அமிலம் குடலைப் பாதிக்க ஆரம்பிக்கும். நாளடைவில் குடலில் புண் ஏற்படும். தேவையில்லாத எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.

அல்சர் வந்துவிட்டால் முதலில் குடல் புண் ஆற மருந்து தருவோம். அதன் பிறகு முறையாக உணவு எடுத்துக்கொள்வது அவசியம். புகை, மதுப் பழக்கங்களை உடனடியாகக் கைவிட்டால், அல்சர் முழுமையாக குணமாகும். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் குழைய வேக வைத்த அரிசி சாதம், கஞ்சி போன்றவற்றோடு கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. காரம் சேர்க்காத மோர் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயில் வதக்கிய, பொரித்த உணவுகள், இனிப்பு பலகாரங்கள், காரமான குழம்பு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டை ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிடுவது நல்லது. சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அல்சரைத் தவிர்ப்பதோடு, இதர நோய்களிலில் இருந்தும் தப்பிக்க முடியும்!
G.JK Media Works Health Team 2011

Ingen kommentarer:

Legg inn en kommentar